Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை 40% ஓட்டுடன் திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது: பாஜவுக்கு வலிமை இல்லை, அண்ணாமலை பரபரப்பு பேச்சு

கோவை: கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:  அரசியலில் ஒரே இரவில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது. காவல்துறையில் இருந்து விலகி மனப்பூர்வமாகவே, பாஜவில் இணைந்தேன். 2026ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பாஜ இலக்கு. அதற்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே நடைமுறை சாத்தியம் என்பதால், அதற்கான உத்தி வகுக்கப்பட்டது.

பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என்பது, என் நிலைப்பாடு. அவ்வாறு போட்டியிட்டால், 2026ல் ஆட்சியைக் கைப்பற்றும் வலிமை பாஜவுக்கு இல்லை. அதனாலேயே, கூட்டணி சேர்ந்தோம். கட்சிக்கு எது நல்லதோ, அதை செய்ய வேண்டும். அப்படித்தான் தலைமை மாற்றம் நிகழ்ந்தது. அதிமுகவில் அனுபவம் வாய்ந்த மிக மூத்த தலைவர்கள் உள்ளனர். உட்கட்சி விவகாரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது, அவர்களுக்கு தெரியும்.

எனக்கும் அதிமுகவுக்கும் உரசல் இருந்தது. நான் என்னவெல்லாம் செய்தேனோ, அவை அனைத்தும் பாஜ வளர்ச்சிக்காகவே. என் கட்சிக்காக பேசினேனே தவிர, மற்றவர்களை அவமதிக்கும் நோக்கமில்லை. அவர்களும் விமர்சித்தனர், நானும் விமர்சித்தேன். ஊழல் பற்றி பேசும்போது, என்னென்ன நடந்தது எனக் கூறித்தான் ஆக வேண்டும். அப்போதும் கூட, ஜெயலலிதா பெயரை குறிப்பிட்டதில்லை. தமிழகத்தை பொறுத்த வரை, விஜய் ஒரு பிரதான போட்டியாளர்.

இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்திருக்கிறார். 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள், 2.28 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு, 8 முதல் 12 சதவீதம் வரை ஓட்டு கிடைக்கும். விஜய்க்கு அப்படி கிடைக்குமா என தெரியாது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்க முடியாது. திமுக. அதிமுக என இரு கூட்டணிகளுக்கும் வெளியே, 20 முதல் 25 சதவீத ஓட்டுகள் உள்ளன.

இன்றைய சூழலில், திடமான கூட்டணியுடன் திமுக மிகவும் வலிமையாக உள்ளது. 40 சதவீதத்துக்கும் மேல் ஓட்டு உள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக இல்லை. நவம்பர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி, மார்ச்சில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். அது தான் முக்கியம். அதுவே தேர்தல் முடிவை தீர்மானிக்கும். வரும் தேர்தலில் நான் போட்டியிடுவேனா?, பிரசாரம் செய்வேனா? என்பதை கட்சிதான் தீர்மானிக்கும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

* ‘சனிக்கிழமை விஜய் இது சரியில்லை’

‘சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக் கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24 மணி நேரமும் இருக்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன்.

வார நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்க கூடிய அரசியல் கட்சிக்கு சரியானதல்ல. கட்சித் தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன் என்றால் எந்தளவுக்கு சீரியஸாக அரசியல் களத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை மக்கள் வைக்கிறார்கள்’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

* கூட்டணியில் இருந்து டிடிவி வெளியேற நயினார் காரணமா?

பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை மதுரை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டிடிவி, ஓபிஎஸ் ஆகிய இருவரும் தேஜ கூட்டணியில் இருக்க வேண்டும். இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன். டிடிவியிடம் இதைதான் வலியுறுத்தியிருக்கிறேன்.  எப்போதுமே ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீங்கன்னா எல்லோருக்கும் அந்த டைம் வேணும் செட்டில் ஆகுறதுக்கு.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைப்பது தொடர்பாக எடப்பாடி பேசியதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்தேன். அவர்கள் தரப்பிலிருந்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பாஜவின் நிலைப்பாடு முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை கடவுளாக நினைக்கிறோம். எப்போதும் அவருக்கு மரியாதை கொடுக்கிறோம்.

இமானுவேல்சேகரன் அய்யாவின் நினைவு நாளுக்கு செல்கிறோம். நானும் செல்கிறேன். எங்களை பொறுத்தவரையில் இதில் எதுவும் சர்ச்சை இல்லை. தேஜ கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் தான் காரணம் என டிடிவி கூறுவது குறித்து கருத்து சொல்லப்பட்டு விட்டது. நயினார் நாகேந்திரன் பேசிவிட்டார் மீண்டும் அதை நோண்ட வேண்டாம். அது அழகல்ல. காலம் கனிந்து வரட்டும். பொறுத்திருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.