Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் போது ரேஷன் அட்டை, ஆதாரை ஆவணங்களாக பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, டி.எம்.செல்வகணபதி, தங்க தமிழ்செல்வன், கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், முரசொலி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர்களை இன்று சந்தித்தனர். அப்போது பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அனைவரும் டெல்லியில் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, தேர்தலில் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள், புதிய நடைமுறைகள் உள்ளிட்டவை தொடர்பான கருத்துக்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் தனித்தனியாக கருத்துகளை கேட்டு வந்தது.

திமுகவிடமும் கருத்தையும், ஆலோசனையையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அப்போது திமுக தரப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும்போது மக்கள் இலகுவாக ஆவணங்களை வழங்க ஏதுவாக நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டை, ஆதார் ஆவணங்களை பெற வேண்டும். இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து விரைவாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணிவிட்டு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை எண்ண வேண்டும்.

தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் ஆங்கிலம், இந்தி போன்று தமிழிலும் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காத நிலை மாநிலத்தில் பல வாக்குச்சாவடிகளில் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்தையும் பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் போது ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றை ஆவணமாக பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவற்றை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், ஓரிரு மாதங்களில் தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் என்று தெரிவித்தார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.