திமுக உறுப்பினர் சேர்க்கையை தடுக்க நினைத்த அதிமுக, பாஜவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்து விட்டது: ஓடிபிக்கு பதிலாக புதிய வழிமுறையை பின்பற்ற ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்
சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கையை தடுக்க நினைத்த அதிமுக, பாஜவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்து விட்டது. ஓடிபிக்கு பதிலாக புதிய வழிமுறையை பின்பற்ற ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி தொடங்கி வைத்தார். அன்று முதல் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதை தாங்க முடியாமல் அரண்டு போய் அவதூறுகளை பரப்பி மக்களை குழப்ப பார்த்து அதில் தோற்றுப் போனார்கள். இதனால், நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுகவிற்கு, நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது என கூறி பழனிசாமி முகத்தில் கரியை பூசிவிட்டது.
மேலும் ஓடிபி மட்டும் கேட்காமல் வழக்கம் போல உறுப்பினர் சேர்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதற்றமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் ஓடிபி பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கையாக உள்ளது.
ஓடிபி கேட்கும் முறை தற்போது இல்லை. ஆனால் அலைபேசி எண் கட்டாயம். தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்ப்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும். எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026ம் ஆண்டிலும் முதல்வர் தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.