திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி வாக்காளர் பட்டியல் முறையற்ற முறையில் தயாரித்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
சென்னை: வாக்காளர் பட்டியல் முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டால் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறினார். திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. அதிமுகவினர், எஸ்ஐர்-ஐ வரவேற்று பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரே, தன்னுடைய கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதற்கு, திமுகவின் பிஎல்ஏ-க்கள் தான் உதவி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தன்னுடைய இணையதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது முறையற்ற வகையில் செய்யக்கூடிய இந்த எஸ்ஐஆர்-ஐ தான் திமுக எதிர்க்கிறது. இது களத்தில் பிராக்டிக்கலாக செய்ய வேண்டிய ஒரு வேலை. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான தயாரிப்பு வேலைகளை செய்ய தவறிவிட்டது. தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பிஎல்ஓக்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பிஎல்ஓக்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை; இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உறுப்பினராக இருந்து தேர்தல் ஆணையாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை, ஒன்றிய பாஜ அரசு அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து மாற்றியது. இந்தச் சட்டத்தில், பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் மட்டுமே நியமனத்தில் இருப்பார்கள் என்ற முறையை கொண்டு வந்தனர்.
1.12.2023 அன்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர் இந்த சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று சொல்லவில்லை. இந்த சட்டத்தின் விளைவாக, பாஜ தேர்ந்தெடுப்பவர்கள் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் இன்று மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இந்த எஸ்ஐஆர்-ஐ நடத்துகிறது. திமுக எப்போதும் ஒரு முழுமையான, நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடி எந்தவொரு தனி மனிதரின் வாக்கும் பறி போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


