திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் கூட்டாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்
40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதை தக்க தரவுகளோடு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி உள்ளார். முந்தைய ஆட்சியின் 10 ஆண்டு கால நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி போன்ற தடைகளை கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி உள்ளோம். தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பாஜக வன்ம அரசின் ஓரவஞ்சனை தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி உள்ளோம். இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ள முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாதவை. காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதவை. சொன்னதையும் செய்திருக்கிறோம், சொல்லாததையும் செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.