பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் : திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பரபரப்பு பேட்டி!!
சென்னை : அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் இணைந்தார் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்வர் ராஜா, "மானமுள்ள சமுதாயமாக தமிழ் சமூகத்தை மாற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன்.அதிமுக தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு பாஜக கையில் சிக்கியுள்ளது. 3 முறை பேட்டி அளித்த அமித் ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி என்று கூறவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். 10 நாள் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று உறுதிபடுத்தவே முடியவில்லை.
நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைபோல நான்தான் முதல்வர் என்று எடப்பாடி கூறிக்கொண்டே இருக்கிறார். அதிமுகவை சீரழிப்பதற்குதான் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. டிரம்ப் கூறியதை யாரும் நம்பாததுபோல் எடப்பாடி பழனிசாமி கூறுவதையும் யாரும் ஏற்கவில்லை. எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்தாலும் அக்கட்சியை அழிப்பதே பாஜகவின் நோக்கம். கூட்டணி ஆட்சி நடக்கும் அதில் பாஜக இடம்பெறும் என்றுதான் அமித் ஷா கூறிவருகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று நேற்றுதான் பழனிசாமி கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக தலைவர்கள் மன வருத்தத்தில்தான் உள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல, அதிமுகவை அழிப்பதே நோக்கம்.
அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைந்தாலும் 10 நாளில் ஆட்சியை கலைத்து பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் ஆகிவிடுவார். மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் என பிரச்சாரம் செய்துவிட்டு பட்னவிஸை முதல்வராக்கியது பாஜக. 7 முன்னாள் அமைச்சர்கள் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியும் அதிமுக ஒற்றுமைக்கு ஒத்துழைக்கவில்லை அன்வர் ராஜா. தமிழ்நாட்டு மக்கள் அதிமுக, பாஜக கூட்டணியை விரும்பவில்லை. என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப்பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். நிச்சயமாக மு.க.ஸ்டாலின் | மீண்டும் முதலமைச்சராவார்.
தலைவன் மீது நம்பிக்கை வைத்துதான் தமிழ்நாடு மக்கள் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இனி வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.மொழிக்கு ஆபத்து வருகிறபோது ஒன்றிய அரசோடு போராடி பாதுகாப்பவர் மு.க.ஸ்டாலின். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கான எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான். திமுகவில் என்னை இணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவித்தார்.