Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளதை கண்டித்து இன்று திமுக கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும்.

தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002, 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நவம்பர் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சென்னையை பொறுத்தவரை சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை வளைவு அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சிறப்புரையாற்றுகிறார். சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னை கிழக்கு, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தங்­க­சாலை மணிக்­கூண்டு அரசு அச்சகம் அரு­கில் ஆர்ப்­பாட்­டம் நடக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செய­லா­ளர் பெ.சண்­மு­கம், விசிக தலை­வர் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றுகின்றனர். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரம் பஜார் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். இதே போல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.