Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக கூட்டணி வலுவாக உள்ளது எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது: திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை: திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகத்தில் எந்த கூட்டணியும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திருமாவளவன் தெரிவித்தார். மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்க உள்ள கமல்ஹாசனை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது.

திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதிமுகவும், பாஜவும் இன்னும் முரண்பாடாக தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை; கூட்டணியை உருவாக்குகிற முயற்சியிலும் ஈடுபடவில்லை. திமுகவை எதிர்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கிறார்கள். முதலமைச்சர் சொல்வது போல ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் திமுக கூட்டணி வலுப்பெற்று வருகிறது.

எதிர்க்கட்சி விமர்சனம் செய்து, அழைப்பு விடுப்பதன் மூலம் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதிமுக காலத்திலும் எங்களுக்கு நெருக்கடிகள் இருந்தது, ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர்ச்சி பெற முடியும். தமிழகத்தில் 3வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியிலும், மாநிலத்திலும் 3வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.

3வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. 2026 தேர்தல் இரு துருவ போட்டியாகதான் இருக்கும். வரும் தேர்தலில் திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. திமுக, அதிமுகவை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.