திமுகவையும், கூட்டணியையும் யாராலும் அழிக்கவும், உடைக்கவும் முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுகவையும், திமுக கூட்டணியையும் யாராலும் அழிக்கவும் முடியாது, கூட்டணியை உடைக்கவும் முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை அடுத்த மறைமலைநகரில், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுவதும் திமுக தலைவரின் கால் படாத கிராமமே கிடையாது. ஒவ்வொரு மாணவரும் உயர்க்கல்வி பெறவேண்டும்.
தற்போது, 75 சதவீதம் நிறைவேறிவிட்டது. 100 சதவீதம் உயர்கல்வி பெறவேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் தலைவரை போல உழைப்பதாக சொல்திறார்கள். தலைவரை போல உழைக்கவே முடியாது. அவரது உழைப்பில் 20 சதவீதம் உழைத்தாலே போதுமானது. திமுக அரசின் சாதனைகளை நாம் ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். திமுக மட்டும்தான் மக்களிடம் உண்மையை பேசி வருகிறது. சங்கிகளை போல பொய் பிரசாரம் செய்பவர்கள் கிடையாது. திமுகவை ஒழித்துவிட்டு தமிழகத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது.
அதனால், மீண்டும் நாம் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும். ஒவ்வொருவரும் தலா 50 ஓட்டுகளை சேகரிக்க வேண்டும். உங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் அல்லது அறிவாலயம் அல்லது அன்பகம் என எங்களை தொடர்பு கொண்டு கூறுங்கள் நிச்சயம் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி தலைவர் கூட்டம் போடும்போது, சாலையின் நடுவே கூட்டம் போட்டால் ஆம்புலன்ஸ் வரத்தான் செய்யும். கூட்டம் போடும்போது ஆம்புலன்சிற்கு வழிவிடுங்கள் என்றுதான் சொன்னேன். அதற்காக என்னைப்பற்றி வன்மமாக பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டும். என்றைக்குமே நீங்கள்தான் அதிமுக பொது செயலாளராக இருக்கவேண்டும். உங்களால்தான் முடியும். அதை நான் முன்மொழிகிறேன். அதுதான் எங்களுக்கு சுலபமாக இருக்கும். நீங்கள் தமிழகத்தை மீட்போம் என்கிற சுற்றுப்பயணம் செல்வதை விட்டுவிட்டு முதலில் அதிமுகவை மீட்பதை பாருங்கள். மேலும் திமுகவை அழிக்க நினைத்து எங்களை வெட்ட வெட்ட வளர்ந்து நிற்போம். திமுகவையும் திமுக கூட்டணியையும் யாராலும் அழிக்கவும் முடியாது, கூட்டணியை உடைக்கவும் முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அப்துல் மாலிக், பிரபு, மறைமலை நகர் வடக்கு நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான ஜெ.சண்முகம், மறைமலைநகர் தெற்கு நகர செயலாளர் த.வினோத்குமார், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர செயலாளரும் கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவருமான எம்.கே.டி.கார்த்திக், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, காட்டங்கொளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்தாக கூட்டத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மறைமலை நகர் நகராட்சி அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தை மீட்போம் என்கிற சுற்றுப்பயணம் செல்வதை விட்டுவிட்டு முதலில் அதிமுகவை மீட்பதை பாருங்கள்.