Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுகவின் 2026 தேர்தல் பிரச்சார வியூகம் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் இரண்டாம் கட்டம் துவக்கம்: வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: திமுகவின் 2026 தேர்தல் பிரச்சார வியூகத்தின் ஒரு பகுதியாக, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் 2ம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் தொடங்கி வைத்து, அங்கிருந்த வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்கிற பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த பரப்புரையின் 2ம் கட்டம் நேற்று முதல் தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் தொகுதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வாக்குச்சாவடியில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். இந்த வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துக் கொடுத்தார். அந்த பாகத்தில் உள்ள திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், பி.எஸ்.ஏ.-2 முகவர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், ‘ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் திமுகவினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், ‘வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு, மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, அவைத் தலைவர் ராஜேந்திரன், பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், வாக்குச்சாவாடி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பரப்புரை, அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் செயலாளர்கள் 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் செயலாளர்களுடன் 78 திமுக மாவட்ட செயலாளர்கள், 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68,463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 463-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளதால் அத்தனை வாக்குச்சாவடிகளிலும் வெற்றி பெறுவதற்காக இந்த பரப்புரை நேற்று மேற்கொள்ளப்பட்டது. 6.8 லட்சம் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தவும் அணி திரட்டவும் இந்த பிரசார வியூகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த முன்னெடுப்பு திமுகவிற்கு பெரும் பலத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான் - முதல்வர்

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.