திமுக இளைஞர் அணி சார்பில் திமுக 75 அறிவுத்திருவிழா மாபெரும் நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் திமுக 75 அறிவுத்திருவிழா மாபெரும் நிகழ்ச்சி சென்னையில் நாளை நடக்கிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி ‘திமுக 75 அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9.30 மணியளவில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைக்கிறார்.
75 ஆண்டுக்கால வரலாறு கொண்ட திமுக அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தேசிய கட்சி தலைவர்கள், திமுக தலைவர் உள்ளிட்ட திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய, 1120 பக்கங்கள் கொண்ட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் புத்தகம், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் உருவாகியுள்ளது.
இந்த ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள், திமுக இளைஞர் அணிச்செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகக இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த விழாவில் ‘தன்மானம் காக்கும் கழகம்’ என்னும் மேடை நாடகம் நடக்கிறது.
முதல்வர் தொடங்கிவைக்கும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் பத்து அமர்வுகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. நாளை மறுநாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்க நிறைவுரை ஆற்ற உள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முயற்சியாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யைக் திமுக இளைஞர் அணி முன்னெடுக்கிறது. குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்களின் 58 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த முற்போக்கு புத்தகக்காட்சியில் அனுமதி இலவசம்.

