Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாருக்கு பாதிப்பு என்பது பின்னால் தெரியவரும்; விஜய் கட்சியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; சந்தோஷம்தான்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

ஆலந்தூர்: ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம், காக்க, மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் துவக்கி வைத்து வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் வீடு வீடாக சென்று 9 லட்சத்து 81 ஆயிரத்து 526 பேரை உறுப்பினராக சேர்த்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைந்துள்ளோம்.

தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் தந்த 504 வாக்குறுதிகளில் 396 வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். தினமும் மக்களை சந்தித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பட்டா வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கும் காஞ்சிபுரத்தில் 25 ஆயிரம் பேருக்கும் பட்டா வழங்கி உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து வருகிறோம். 45 நாளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மக்கள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

தமிழக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை விஜய் சொல்லி உள்ளார். மக்களுக்கு உழைக்ககூடிய இயக்கம் எது என்று அவர்களுக்கு தெரியும். திமுக செய்த சாதனையை யாரும் செய்ததில்லை. எதிர்கட்சிகளின் புகார்கள் மக்கள் மத்தியில் எடுபாடாது. சாதாரண நடிகர் வந்தாலும் கூட்டம் சேரும்.

விஜயகாந்த்திற்கு வராத கூட்டமா? விக்கரவாண்டியில் விஜய்காந்த்திற்கு சேராத கூட்டமா?

விஜய் கட்சியில் சரியான தொண்டர்கள் இல்லை. கட்டுபாடு இல்லாத குழந்தைகள், சினிமா பார்த்து விட்டு சென்றவர்களுக்கு கொள்கை எதுவும் தெரியாது. எல்லா கட்சிகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்த நிலை பின்னர் எப்படி இருந்ததோ அந்த நிலைதான் விஜய்க்கும் ஏற்படும். மக்களை களத்தில் சென்று பார்த்து இருப்பாரா? யாரோ எழுதி தருவதை பேசுகின்றார். தவறு செய்து விட்டு களத்தில் செல்ல முடியுமா? கோரிக்கைகளை நிறைவேற்றுவதால்தான் தைரியமாக மக்களை சந்தித்து வருகிறோம்.

குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்காக உதய் திட்டத்தில் 23 லட்சம் பேர் பதிவிட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு செல்வாக்கு மிக்க மாநிலமாக உள்ளது. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 48 ஆயிரம் பேரைதான் தொழில் முனைவோர்களாக உருவாக்கினார்கள். ஆனால் திமுக ஆட்சியில் 66 ஆயிரம் பேரை உருவாக்கி உள்ளனர். ஸ்டார்ட் அப் மாநாடு முதல்வர் தலைமையில் கோவையில் நடக்க உள்ளது. விஜய் கட்சியால் திமுகவிற்கு பாதிப்பு கிடையாது. விஜய் கட்சி நடத்துவது திமுகவிற்கு சந்தோஷம்தான். ஆனால் யாருக்கு பாதிப்பு என்பது பின்னால் தெரியவரும். இளைஞர்கள் அதிகமாக உள்ள இயக்கம் திமுக. இவ்வாறு அவர் கூறினார்.