Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்; சீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போது, வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக 2.7.1990 அன்று நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் 13,500 மக்கள் நலப்பணியாளர்களையும் பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கடந்த 2014ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2022 ஜனவரி 6ம் தேதி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அந்த விவகாரத்தையும் உறுதிப்படுத்தியது. பின்னர் 2022 ஏப்ரல் 20ம் தேதி மக்கள் நல பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணி வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘தமிழ்நாட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். அதாவது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் இருக்கும் வரையில் அதுவும் இருக்கும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2023ம் ஆண்டு மே.8ம் தேதி மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனக்கூறி சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.