Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்மை துறை சார்பில் 43 லட்சம் மகளிர் பயன்

*விவசாயிகள் மாநாட்டில் அமைச்சர்கள் பேட்டி

கிருஷ்ணகிரி : திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், வேளாண்மை துறை சார்பில் 43 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் அரணாக திமுக அரசு உள்ளது என கிருஷ்ணகிரியில் அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி கூறினர்.கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட பெண் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளர் கோமலா தலைமை வகித்தார். மாநில தேசிய மகளிரணி செயலாளர் சக்திசங்கர் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், மாநில மகளிரணி செயலாளர் பெருமா காசி, செயல் தலைவர் எழிலன், பொதுச்செயலாளர் ஆல்பர்ட் அந்தோணி, துணை பொதுச்செயலாளர் ராஜா, காவேரி பாசன விவசாயிகள் சங்கம் பார்த்தசாரதி, மாநில மகளிரணி நிர்வாகிகள் திண்டுக்கல் சந்திரகாந்தா, ஈரோடு விஜயலட்சுமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க அவைத்தலைவர் நசீர்அகமது, சித்ரா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர், அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், வேளாண்மை உழவர் நலத்துறையின் 27 திட்டங்கள் மூலமாக வேளாண்மை துறை சார்பில் 24 லட்சத்து 18 ஆயிரத்து 358 மகளிரும், தோட்டக்கலைத்துறை சார்பில் 18 லட்சத்து 96 ஆயிரத்து 456 மகளிரும் என மொத்தம் 43 லட்சத்து 14 ஆயிரத்து 814 மகளிர் பயனடைந்து உள்ளனர்.

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மா, தென்னை, மஞ்சள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக விலை நிர்ணயம் செய்தும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கியும் விவசாயிகளுக்கு நன்மை செய்தது தமிழக அரசு.

வடகிழக்கு பருவமழையால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது குறித்து, ஒன்றிய அரசின் 3 குழுவினர் ஆய்வு செய்தனர். நெல்லில் ஈரப்பதம் 22 சதவீதம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆய்வுக்குழுவினரும், சாதகமான பதிலை கூறி சென்றனர். இது குறித்து முதல்வரும், பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஒன்றிய அரசு நெல் கொள்முதல் மற்றும் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்த அனுமதி கொடுக்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70, பொதுவான வகை நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகையாக வழங்கினர். ஆனால், திமுக அரசு சன்ன ரக நெல்லுக்கு ரூ.156ம், பொது ரகத்திற்கு ரூ.131ம் வழங்கியது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செய்ததை விட இது அதிகம். மேலும் எங்கெல்லாம் நெல்லுக்கு நேரடி கொள்முதல் மையம் கேட்டார்களோ, அங்கெல்லாம் கொள்முதல் மையங்களும் அமைக்கப்பட்டன. எப்போதும் விவசாயிகளின் அரணாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநாட்டில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் மா மற்றும் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. மா சீசனில் விளைச்சல் அதிகமாக இருந்தபோதும், ஏற்றுமதி தொய்வு காரணத்தினால் விலை குறைந்தது.

அரசு தனியார் ஆலைகளை அழைத்து பேசி, ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. முன்பெல்லாம் மாம்பழ சீசனில் நாம் அதிகளவில் மாம்பழங்களை சாப்பிடுவோம், மா சாறு குடிப்போம். ஆனால், தற்போது அதிகப்படியான மக்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மா சாப்பிடுவது, மாம்பழ சாறு குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதனால், மாம்பழங்கள் தேக்கம் அடைகின்றன.

இந்த சீசனில் மா விளைவித்தவர்களுக்கும் பிரச்னை. மாம்பழத்தை சின்னமாக வைத்திருக்கும் கட்சிக்கும் பிரச்னை,’ என்றார்.இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசன், நகர செயலாளர் அஸ்லாம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.