தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் வேலைக்கு வந்த வடமாநிலத்தவர் தமிழகத்தில் வாக்காளராக முடியாது: பிரேமலதா பேச்சு
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 74 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், சுமார் மூன்று மணி நேரம் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டது.
எஸ்.ஐ.ஆர் பற்றி தற்போது பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும் தேமுதிக 2026 சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க தயாராக இருக்கிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடாமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது அறிவுரை. ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள மக்கள் மீட்போம் என்கிற மிகப்பெரிய மாநாட்டில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி முரசு சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் வேலைக்கு வந்தாலும் வாக்காளராக ஆக முடியாது. தாங்கள் பிறந்த மாநிலத்தில் வாக்களிப்பது தான் சரியாக இருக்கும். எதிர்க்கட்சிகள் வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசும் தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
