பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2023ல் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது சித்தராமையா முதல்வரானார். அப்போதே, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு டி.கே.சிவகுமார் முதல்வராவார் என்று பேசப்பட்டது. அதற்கேற்ப, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அதை நினைவூட்டி அவ்வப்போது சர்ச்சையை கிளப்பிக்கொண்டே இருந்தனர்.
சித்தராமையா முதல்வராகி நேற்றுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவகுமார் ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி, டி.கே.சி ஆதரவு எம்.எல்.ஏக்கள் இக்பால் உசேன், எச்.சி.பாலகிருஷ்ணா, எஸ்.ஆர்.சீனிவாஸ் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். மேலும் 12 எம்.எல்.ஏக்கள் இன்று டெல்லி செல்கின்றனர். டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


