டி.கே.சிவகுமார் திடீர் டெல்லி பயணம் கர்நாடக அமைச்சரவை நவம்பரில் விரிவாக்கம்: முதல்வர் சித்தராமையா தகவல்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம், நவம்பர் புரட்சி என்று பேசப்படுவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுக்குப் பிறகு டி.கே.சிவகுமார் முதல்வராவார் என்று காங்கிரஸ் 2023ம் ஆண்டு மே மாதம் ஆட்சியமைக்கும் போதே கூறப்பட்டது.
அதிகாரப்பகிர்வு என்ற உடன்படிக்கையின் பேரிலேயே சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தவகையில், இரண்டரை ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என்றும், நவம்பரில் அரசியல் புரட்சி நடக்கும் என்றும் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்நிலையில், பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ‘அமைச்சரவையை விரிவாக்கம் செய்யுமாறு 4 மாதங்களுக்கு முன்பே கட்சி மேலிடம் என்னிடம் கூறியது.
ஆனால் நான் தான், இரண்டரை ஆண்டுக்குப் பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்யலாம் என்று கூறினேன். எனவே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்ததும், இதுதொடர்பாக மீண்டும் கட்சி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிப்பேன். அவர்களது ஆலோசனையின் படி செயல்படுவேன். நவம்பர் 16ம் தேதி டெல்லி செல்கிறேன்.
அப்போது மேலிடத் தலைவர்களைச் சந்தித்து பேசுவேன்’ என்றார். இந்த பரபரப்புக்கு இடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று டெல்லி சென்ற நிலையில், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அவ்வப்போது டெல்லி செல்வது வழக்கம். அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் சித்தராமையா பேசுவார் என்று கூறினார்.
