தீபாவளிக்கு சென்றவர்கள் 11 நாட்களுக்கு பின் திரும்பினர் விஜய் பிரசார பலி வழக்கு சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை: எஸ்ஐடி அளித்த 1,316 பக்க விசாரணை அறிக்கையை மொழி பெயர்க்கும் பணி தீவிரம்
கரூர்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் நேற்று கரூர் திரும்பினர். தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டருடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் வந்த சிபிஐ அதிகாரி பிரவீன்குமார், ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு காரில் சென்று 5 நிமிடம் பார்வையிட்டனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றனர். சிபிஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர், சிறப்பு புலனாய்வு குழு அளித்த 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை சரிபார்ப்பு மற்றும் மொழி பெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சொந்த ஊரிலிருந்து சிபிஐ அதிகாரிகள், 11 நாட்களுக்கு பின் நேற்று காலை 8 மணியளவில் கரூர் திரும்பினர். அவர்கள் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபின் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும், குடும்பத்தினரை பயணியர் விடுதிக்கு வரவழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் நேற்று மதியம் 3 மணிக்கு பயணியர் விடுதிக்கு வரவழைக்கப்பட்டார். அவருடன் சுமார் ஒரு மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
 
  
  
  
   
