சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, கார வகைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பண்டிகையின் போது முக்கிய பங்கு வகிக்கும் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களின் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்வது குறித்து, இனிப்பு கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு சென்னை தியாகராயநகரில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ் செல்வன் பேசியதாவது: இனிப்பு, பலகாரங்கள் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் முறையாக பதிவுசெய்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெறாமல், விற்பனை செய்தால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு, கார வகைகளை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தரமான முறையில் கலப்படமில்லாமல் தயாரிக்கவேண்டும். இனிப்பு பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிப்ட் பாக்ஸ்களில் பார்சல் செய்யப்படும் இனிப்புகளை உணவு பாதுகாப்பு துறையின் ‘லேபிள்’ விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட வேண்டும்.
புகார் அளிக்க... தரமில்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் வாடிக்கையாளர்கள் 94440 42322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் புகார் அளிக்கலாம்.