தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தமிழகம் முழுவதும் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீபாவளி பண்டிகை இன்று ெகாண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது என்பது முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
அதுவும் இரவு நேரங்களில் வானத்தில் பட்டாசுகளால் வண்ண ஜாலங்கள் நடப்பது என்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. தீபாவளி பண்டிகையன்று அரசு விதித்த 2 மணி நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188ன் படி பதிவு செய்யப்படுகிறதுது. தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285ன்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
6 மாத சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க சட்டப் பிரிவு 188 வழி செய்கிறது. அதே போல இந்தாண்டு தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பொதுமக்கள் பின்பற்றுவதோடு சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் அந்தந்தப் பகுதியில் தீபாவளியன்று ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீ விபத்து அல்லது பட்டாசுகளால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஆகியவற்றை 101 இலவச தொலைபேசி எண்ணையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 தொலைபேசி எண்ணையும் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.