தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு: விதிமீறினால் கடும் நடவடிக்கை
திருவள்ளூர்: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆணையர் லால்வேனா அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்படி, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, பலகாரங்கள், காரவகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.கதிரவன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைள், கேக் ஆகியவற்றை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு, காரவகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, காரவகைகள், பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களை கொண்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள தயாரிக்க கூடாது. இதனை ஆர்யுசிஓ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்றுஇல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து விற்பனை செய்திடல் வேண்டும்.
உணவுப் பொருட்களை செய்தி தாளில் மடித்து தரக்கூடாது. இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகைய உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரம்பாக்கம் ஏவிஏ ஹோட்டல் உரிமையாளர் ஏவிஏ.ராஜ்குமார், பெரம்பூர் சீனிவாசா ஹோட்டல் மேலாளர் கே.அருண்குமார், நெல்லை ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராஜசேகர், கடம்பத்தூர் அய்யனார் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பெருமாள், நந்தினி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.