Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகை அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்.

* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தீப ஒளி ஏற்றுவதால் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்த தீப ஒளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்; சினம் அகன்று பொறுமை மலரட்டும்; அராஜகம் அழிந்து அமைதி நிலவட்டும்; வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஓங்கட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

* பாமக நிறுவனர் ராமதாஸ் : இயந்திர வாழ்க்கையில் சந்திப்புகள் குறைந்து போன உறவுகள் கூடிக் குலவவும், உள்ளங்கள் மகிழ்ந்துறவாடவும் விழாக்கள், கொண்டாட்டங்கள் ஊக்கமளிக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் பண்டிகைகள் மனிதர்கள் வாழ்வில் மலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : மக்களுக்கு சுமைகள், தீமைகள் நீங்கி, நன்மைகள் நிறைந்து, இன்பங்கள் மிகுந்து, வாழ்வு சிறக்கும் வகையில் தீபாவளி திருநாள் அமைய வேண்டும்.

* பாமக தலைவர் அன்புமணி:மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வேண்டும்.

* காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்: தீமையை வென்று நன்மை வெற்றி கண்ட இந்த நன்னாளில் நமது சமூகத்தில் நிலவி வரும் தீய சக்திகளை வீழ்த்தி நன்மையை வெற்றி காண செய்வோம்.

* சரத்குமார் (பாஜ) : நமது சமூகமும், நாடும் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து பயணித்திட, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒளியைப் போல் பிரகாசிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவோம்.

* சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன்: அறியாமை எனும் இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச்செய்யட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும்.

* இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: சாதி,மதம்,இனம்,மொழி எல்லாம் கடந்து தீபாவளியை அனைவரும் ஒன்றாய் கொண்டாடுவோம். இனிவரும் நாட்கள் எட்டுத்திக்கும் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளியாய் மாறட்டும்

இதேபோல வி.ஜி.சந்தோசம்,தமிழ்நாடு ஐஎன்டியுசி முதன்மை பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன்,

இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, இந்தியா நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.