Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை, மங்களூரு, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை, போத்தனூர், மங்களூரு, திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களில் பலர் குடும்பமாக பயணம் செய்வார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17ம் தேதியே ஊருக்கு கிளம்புவார்கள்.

எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களால் வழக்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு டிக்கெட்கள் விற்பனை முடிந்தது. அதாவது முக்கிய ஊர்களுக்கு செல்லும் சேரன், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை எஸ்க்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் மீண்டும் தெற்கு ரயில்வே சார்பில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை- செங்கல்பட்டு இரு வாராந்திர சிறப்பு ரயில்: ரயில் எண் 06156 நெல்லை - செங்கல்பட்டு இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (2 சேவைகள்) அக்.21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறு மார்க்கத்தில், ரயில் எண் 06155 செங்கல்பட்டு - நெல்லை இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (2 சேவைகள்) அக்.21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடையும். மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 1 ஏசி சேர்கார், 12 அமரும் வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது 2ம் வகுப்பு பெட்டிகள், மற்றும் இரு 2ம் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.

போத்தனூர் - சென்னை மற்றும் சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்: ரயில் எண் 06044 போத்தனூர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.19 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போத்தனூரிலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். ரயில் எண் 06001 சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.20 (திங்கட்கிழமை) அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும். ரயில் எண் 06002 மங்களூரு சென்ட்ரல் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.21 (செவ்வாய்க்கிழமை) அன்று மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

ரயில் எண் 06043 சென்னை - போத்தனூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.22 (புதன்கிழமை) அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 10 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும். திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 7 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 4 ஏசி மூன்றடுக்கு, 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி இருக்கும்.

திருவனந்தபுரம் -எழும்பூர் சிறப்பு ரயில்கள்: ரயில் எண் 06108 திருவனந்தபுரம் நார்த் - எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.21 (செவ்வாய்க்கிழமை) அன்று திருவனந்தபுரம் நார்த்திலிருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூரைச் சென்றடையும். மறு மார்க்கத்தில், ரயில் எண் 06107 எழும்பூர் - திருவனந்தபுரம் நார்த் அதிவிரைவு சிறப்பு ரயில் (ஒரு சேவை) அக்.22 (புதன்கிழமை) அன்று சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் நார்த்தை வந்தடையும். ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 16 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்குப் பெட்டிகள் இருக்கும். இந்த தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.12) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.