தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 6.30 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
* ஜிஎஸ்டி சாலையில் 5 கி.மீ. அணிவகுத்த வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு இன்று முதல் மாற்று வழித்தடம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இதுவரை 6.30 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வகையில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று காலை முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 761 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,853 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இதில் 1,28,275 பேர் பயணித்ததாகவும் போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுவரை 1,36,413 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 2 ஆயிரம் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதில் 16ம் தேதியில் 1383 பேருந்துகளில் 47610 பயணிகளும், நேற்று 1810 பேருந்துகளில் 63683 பயணம் செய்துள்ளனர். இன்று 1180 பேருந்துகளில் 47610 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே மூலம் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதின. குறிப்பாக, சென்னையில் இருந்து மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் நிரம்பி வழிந்தன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை இன்று கூடுதலாகவே இருக்கும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து மட்டும் சிறப்பு பஸ், ரயில், ஆம்னி பஸ், கார் மற்றும் இதர வாகனங்களில் இதுவரை 6.30 லட்சம் லட்சம் பேர் பயணித்திருக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளன. நேற்று இரவு கோயம்பேடு - மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை, ஜிஎஸ்டி ரோடு உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது.
குறிப்பாக குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ள சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், பூந்தமல்லி முதல் மதுரவாயல் வரையும் வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து சென்றதால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நேற்றைய தினம் அதிகம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடத்தை தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியிலிருந்து திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்றும், மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
