Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பரிசாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: தீபாவளி பரிசாக, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த உயர்வு அறிவிக்கப்படும். விலைவாசியை கருத்தில் கொண்டு மாதாந்திர விலை குறியீடு அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதத்தின்படி ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் அதிகரிப்பால் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,084 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் 49.19 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்

பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக, அக்டோபர் 16 அன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசு ஊழியரின் சம்பளம் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்துப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அவர்களின் மொத்த வருமானத்தில் 51.5% ஆகும். அகவிலைப்படி தோராயமாக 30.9 சதவீதம், வீட்டு வாடகை படி சுமார் 15.4% மற்றும் பயணப்படி சுமார் 2.2 சதவீதம் இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50% ஆகவும் இருந்தால், அகவிலைப்படி தொகை ரூ.18,000-ல் 50% ஆக இருக்கும், அதாவது ரூ.9,000. இந்த ரூ.9,000 அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு சம்பளம் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.