Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளிக்கு முந்தைய நாள் பயணத்திற்கு தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்கில் புரோக்கர்கள் ஆதிக்கம் தவிர்ப்பு: ஆன்லைனில் மாலை வரை டிக்கெட் எடுத்த பயணிகள்

சேலம்: ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு நிபந்தனைகளால், தீபாவளிக்கு முந்தைய நாள் பயணத்திற்கு தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்கில் புரோக்கர்கள் ஆதிக்கம் தவிர்க்கப்பட்டது. மாலை வரையில் ஆன்லைனில் பயணிகள் டிக்கெட் எடுத்துக் கொண்டனர். நாட்டின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில் போக்குவரத்தை அதிகபடியான மக்கள் விரும்புகின்றனர். அதிலும் பண்டிகை காலங்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிக்க மக்கள் மத்தியில் கடும் போட்டி யிருக்கிறது. இதற்காக 60 நாட்களுக்கு முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்கின்றனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் பயண திட்டத்தை வகுத்து செல்லும் மக்களுக்காக ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறை அமலில் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 75 முதல் 150 இருக்கைகள் வரை தட்கல் புக்கிங்கிற்காக ரயில்வே நிர்வாகம் வைத்துள்ளது. ரயில் புறப்படுதற்கு 24 மணிநேரத்திற்கு முன் (ஒரு நாள்) இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி, தீபாவளி பண்டிகையையொட்டிய பயணத்திற்கு கடந்த 2 நாட்களாக தட்கல் புக்கிங், பயணிகளின் கடும் போட்டிக்கிடையே மேற்ெகாள்ளப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 19ம் தேதி பயணத்திற்கு 18ம்தேதி காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான தட்கல் புக்கிங்கும், காலை 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கான தட்கல் டிக்கெட் புக்கிங்கும் நடந்தது.

ஐஆர்சிடிசி செயலி மூலம் ஆன்லைனிலும், ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் 18ம்தேதி காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கும், 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கும் தட்கல் டிக்கெட் புக்கிங்கை மக்கள் செய்துகொண்டனர். இதில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, கோவை மற்றும் கேரளாவிற்கு சென்ற ரயில்களில் தட்கல் புக்கிங், மிக வேகமாக நடந்தது. சில ரயில்களில் புக்கிங் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. ஆனால், ஏற்காடு, நீலகிரி, மங்களூரு, திருவனந்தபுரம், சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 18ம்தேதி மாலை வரை தட்கல் டிக்கெட் இருந்தது. அதனை பயன்படுத்தி, மக்கள் டிக்கெட் எடுத்துக் கொண்டனர்.

அதேவேளையில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சென்ற ரயில்களில் தட்கல் புக்கிங் 5 நிமிடத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அதிகளவு இயக்கியும், தட்கல் புக்கிங்கில் கடும் போட்டி நிலவியது. அந்த அளவிற்கு மிக அதிகப்படியான மக்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய 2 நாள் பயணத்திற்கும் தட்கல் டிக்கெட் புக்கிங், அனைத்து ரயில்களிலும் 2 நிமிடத்திற்குள்ளாக முடிந்து விடும்.

காரணம், ஐஆர்சிடிசி செயலியில் புரோக்கர்கள் பலரும், முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்துகொள்வார்கள். ஆனால், சமீபத்தில் தட்கல் முறைகேட்டை தடுக்க ரயில்வே நிர்வாகம், ஆதார் இணைப்பு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததால், இம்முறை புரோக்கர்களின் ஆதிக்கம் தவிர்க்கப்பட்டது. அதுவும், முதல் அரை மணி நேரத்திற்கு பொதுமக்கள் தட்கல் டிக்கெட் எடுத்துக்கொள்ளவும், அதன்பிறகே அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி முகவர்கள் தட்கல் டிக்கெட் எடுக்கவும் அனுமதித்ததால், சாதாரண மக்கள் பலரும் பயனடைந்தனர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தட்கல் டிக்கெட் புக்கிங்கில் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியதால், மக்கள் சிரமமின்றி தீபாவளி பயணத்திற்கான தட்கல் புக்கிங்கை மேற்கொண்டனர். 17ம்தேதி ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கி, 20 நிமிடத்திற்கு பின் சீரானது. ஆனால், 19ம்தேதி எவ்வித பிரச்னையும் இன்றி சர்வர் வேலை செய்தது. சென்னைக்கு வரும் ரயில்களில் தட்கல் டிக்கெட் இருக்கைகள் இன்னும் இருக்கின்றன. சென்னையில் இருந்து கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் மாலை வரை தட்கல் புக்கிங் நடந்தது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டும் விரைவாக இருக்கைகள் நிரம்பிவிட்டன. புரோக்கர்களின் ஐஆர்சிடிசி கணக்குகளை ஏற்கனவே முடக்கிவிட்டதால், மக்கள் சிரமமின்றி தட்கல் புக்கிங்கை மேற்கொண்டனர்,’’ என்றனர்.