சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம் வழியாக கோவை மாவட்டம் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை- போத்தனூர் சிறப்பு ரயில் (06049) நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது. பிறகு ஈரோடு, திருப்பூர் வழியே போத்தனூருக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், போத்தனூர்-சென்னை சென்ட்ரல் ரயில் (06050) வரும் 18ம் தேதி இயக்கப்படுகிறது. போத்தனூரில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு பிற்பகல் 4.20க்கு வந்தடைகிறது. பிறகு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், போத்தனூர்- சென்னை சென்ட்ரல் ரயில் (06100) வரும் 21ம் தேதி இயக்கப்படுகிறது. போத்தனூரில் இரவு 11.50 புறப்பட்டு சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.20க்கு வந்தடைகிறது. பிறகு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.