நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என விழாக்கள் வந்துவிட்டாலே எங்கும் எதிலும் ஆஃபர் மேளாக்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை திருவிழாக்கள் ஆரம்பித்துவிடும். 70% மக்களை ஆக்கிரமித்துள்ள ஆன்லைன் ஷாப்பிங்கில் வரும் விழாக்கால ஆஃபர்களை எப்படி விழிப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்வது. இதோ சில டிப்ஸ்
சலுகை விலை
சலுகை என்றாலே வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குக் காலம் காலமாகவே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஸ்டாக் கிளியரன்ஸ்ட் ரகமாகவே இந்த சலுகைகள் வரும். எந்தப் பொருள் வாங்கினாலும் புடவையோ, படுக்கை விரிப்போ ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்யுங்கள். எங்கேயாவது கிழிந்திருக்கிறதா? கரை ஏதும் உள்ளதா போன்ற சந்தேகங்கள் எழுவது அவசியம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நகைகள் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். பண்டிகை காலங்களில் எப்படியாயினும் விலை அதிகமாகவே இருக்கும். பண்டிகை முடிந்து அடுத்து வரும் நாட்களில் நகைகள் விலை அப்படியே குறையும். அப்படியான சமயத்தில் பயன்படுத்திக்கொள்வது சிறப்பு.
வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்களை பண்டிகை காலங்களில் தேர்வு செய்யலாம். காரணம் அடுத்து குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பதாலேயே எலக்ட்ரானிக் பொருட்களை பெரும்பாலும் ஸ்டாக் வைத்துக்கொள்ள மாட்டார்கள் வியாபாரிகள். எனவே அதன் சலுகை விலைகளை நம்பலாம். முன்பெல்லாம் நம் பெற்றோர்கள் கடை கடையாக ஏறி இறங்கி பார்த்து வாங்கி வருவர். இன்று அந்த நிலை மாறி பலகாலம் ஆகிவிட்டது. ஒரே கடை, அதிலேயே ஓரிரு மணி நேரத்தில் ஷாப்பிங். காரணம் பார்க்கிங் பிரச்னைகள், கூட்டத்தால் எரிச்சல் என்பதால்.இதற்கு கடை திறந்தவுடனான நேரங்கள் அல்லது மதிய உணவு இடைவேளை நேரங்களில் செல்ல கூட்டம் குறைவாக இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுமானவரை இரண்டொரு கடைகள் அலைந்து திரிந்து ஷாப்பிங் செய்யப் பழகுங்கள். குழந்தைகளுக்கு உடை என்பதை தனியாக ஒருநாள் என மாற்றிக்கொண்டு அவர்களை முடிந்தவரை வீட்டில் வயதானவர்களுடன் விட்டுவிட்டுச் செல்லுங்கள். கூட்டம் குழந்தைகளுக்கும் சரி, வயதானவர்களும் சரி நல்லதல்ல. தேவையே இல்லை என்றாலும் வாங்கிப் போடும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஆஃபர்கள் எப்படியும் பத்து நாட்கள் முன்பே அறிவிப்பு வந்துவிடும். எனில் உங்களுக்குப் பிடித்தமான உடைகளை அப்போதே தேர்வு செய்து ஷாப்பிங் கார்டில் போட்டு வைத்துவிட்டு ஆஃபர் தினத்தில் என்ன சலுகைகள் உள்ளன என சோதியுங்கள். ஒருவேளை பெரிய சலுகை இல்லையெனில் இந்த சேல் மேளா அவ்வளவு பெரிய ஜாக்பாட் இல்லை. பொருட்களை வாங்கும் முன் விற்பனையாளர் குறித்த விபரங்கள், அவரின் மற்ற புராடெக்ட்களையும் ஒருமுறை கண்ணோட்டம் விடுங்கள். புகைப்படங்கள் தெளிவாக உள்ளனவா, அல்லது மங்கலாக இருக்கின்றனவா எனப் பார்ப்பதும் தேவை. காரணம் வெறுமனே ஒரு புகைப்படம் கூட சரியாக பதிவிடவில்லை எனில் புகைப்படம் எங்கேயோ வேறு ஒரு பிராண்ட் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அலர்ட். குறிப்பிட்ட புராடெக்ட்களுக்கு ஏற்கனவே வாங்கிய மக்கள் என்ன விமர்சனங்கள், மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். பிரதானமாக என்னப் பிரச்னைகளை முன் வைக்கின்றனர் என்பதையும் கவனிப்பது அவசியம். அன்பளிப்பு கார்டுகள், கூப்பன்களை வாங்கி அதன் மூலம் பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் எனில் அதன் விதிமுறைகளை நன்கு படித்து வாங்குங்கள்.முடிந்தவரை ‘COD (Cash On Delivery)’ எனப்படும் நேரில் பணம் கொடுத்து வாங்கும் ஆப்ஷன்களை மட்டுமே உபயோகிக்கவும். ரிட்டர்ன் ஆப்ஷன்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் படிப்பது மிகவும் அவசியம். காரணம் இம்மாதிரியான விழாக்கால சலுகைகளின் போது பொருட்கள் ரிட்டர்ன் எடுக்க மாட்டார்கள். எவ்வளவு சீக்கிரம் ஆர்டர்கள் வந்து சேரும், பொருட்கள் அனுப்புவதில் சொல்லப்படும் விதிமுறைகள் என அனைத்தும் படித்துப் பார்த்து ஆர்டர்கள் செய்யவும்.
முடிந்தவரை தெரிந்த, பல வருடங்களாக இருக்கும் ஆன்லைன் தளங்களை மட்டுமே பயன்படுத்தவும். விழாக்காலங்களில் பெரும்பாலும் இந்த திடீர் வெப்சைட்கள் உருவாகி வெறுமனே பொருட்களின் புகைப்படங்களை மற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் எடுத்துக்கொண்டு நம்மிடம் காசை வாங்கிக்கொண்டு மூட்டைக் கட்டி ஓடும் கும்பல்கள் அதிகம் கண்ணில் படும். உஷார். இன்ஸ்டா, முகநூல் உள்ளிட்ட தளங்களில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். பெரும்பாலும் போலிகள்தான். ஏனெனில் ரூ.100 எனச் சொல்லி 1000 பேரிடம் வாங்கினால் கூட ரூ.10,000 வருமானம். இப்படி டார்கெட் செய்து பணத்தை சுருட்டும் போலி ஆன்லைன் தளங்கள் இந்த முகநூல்,இன்ஸ்டாகிராம் தளங்களில் தான் வலை விரிப்பார்கள்.
- கவின்.