Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளியும் விதை பட்டாசும்!

பண்டிகை காலம் தொடங்கியாச்சு... இன்னும் மூன்று தினங்களில் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி விடும்.  புத்தாடை, பலகாரங்கள், பூஜைப் பொருட்கள், பண்டிகை கால தள்ளுபடியில் வீட்டிற்கு புதுப் பொருட்கள் என அனைத்தும் வாங்கினாலும்... பட்டாசு இல்லாத தீபாவளி இருக்குமா!? வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன பட்டாசுகள் வாங்கலாம் என்று திட்டமிடுவார்கள். வாங்கிய பட்டாசுகளை உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் இணைந்து வெடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

ஆனால், இதே மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் நாம் வாழும் இந்த பூவுலகின் மீதும் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் நம் நாட்டில் அளவு கடந்த காற்று மாசுபாடு பதிவாகிறது என்பதை நாம் அறிவோம். அதைக் கருத்தில் கொண்டுதான் பசுமை பட்டாசுகள் அறிமுகமாயின. இதனால் மாசுபாடு ஏற்படுவது சற்று குறையும். அதுவும் வேண்டாம் என்று சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ளவர்கள் விதை பட்டாசுகளுக்கு மாறலாம். இதற்குள் வெடி மருந்துகள் இருக்காது. மாறாக விதைகள் வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேகமாக விதை பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கீர்த்தி.

“ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்க தவறுகிறோம். அளவுக்கதிகமாக பட்டாசுகளை வெடிப்பதால், அது நம் சுற்றுச்சூழலை பெரிய அளவில் பாதிக்கிறது. அதனை தவிர்க்க இந்த விதை பட்டாசுகளை பயன்படுத்தலாம். இந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி ஒளி மற்றும் ஒலியை ஏற்படுத்தாது. ஆனால், இதிலுள்ள விதைகள் சத்தமில்லாமல் வெடித்து முளைத்து செடிகளாக வளரும். புகையும் கழிவுகளும் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். ஆனால், இந்த விதை பட்டாசுகளால் நம் சுற்றுச்சூழல் பசுமையாகும்.

நம் மண்ணில் நாம் எதை விதைக்கிறோம் என்பது முக்கியம். பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடும்போது நமக்கு கண நேர சந்தோஷம் கிடைப்பது போல, நெடுங்காலத்திற்கு நம்மை வாழ வைக்கும் பூமியை பாதுகாக்கும் போது நமக்கு மன நிறைவினை அளிக்கும். இது போன்ற விதை பட்டாசுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கலாம். இந்த விதை பட்டாசுகளை லேசாக மண்ணிலே புதைத்து, கொஞ்சம் நீரூற்றினால் போதும் அவை முளைக்கத் தொடங்கிவிடும். இருப்பினும் வளமான, ஆரோக்கியமான செடிகளாக அவை வளர கோகோபித் உரத்தினை பயன்படுத்தலாம். இதனால் விதைகள் விரைவில் முளைத்து வளரும்’’ என்றவர், விதை பட்டாசுகளின் தயாரிப்பு முறையினை பகிர்ந்தார்.

‘‘நன்கு தேர்ந்த விதைகளையே பட்டாசுகளுக்குள் வைக்கிறோம். அவற்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற மூலப்பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருக்க காகிதங்களை பயன்படுத்தி தயாரிக்கிறேன். காகிதங்களை மறுசுழற்சி செய்ய முடியும். இந்த வகை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் காகிதங்களும் விதைகளும் மண்ணிற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. விதை பட்டாசுகள் மட்டுமின்றி பலவிதமாக வளரக்கூடிய விதைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையும் தயாரிக்கிறோம்.

நான் அடிப்படையில் ஒரு கட்டிடக்கலை கலைஞர்.

அதனால் எதையும் படைப்பாற்றலுடன் செய்ய பிடிக்கும். அதேசமயம் நிலைத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்று கவனமாக இருப்பேன். பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, மறு பயன்பாட்டு பொருட்களை பயன்படுத்துவது, ஹோம் கம்போஸ்ட் தயாரிப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தேன். கொரோனா காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஆர்வமும் எனக்குள் அதிகரித்தது.

அந்த சமயத்தில் நிறைய நேரமும் கிடைத்ததால் நிறைய கைவினைப் பொருட்களை தயாரித்தேன். ரசாயனங்கள் கலக்காத இயற்கை நிறமிகளை கொண்ட ஹோலி கலர் பவுடர்களை தயாரித்தேன். ஓவியத் திறனை கொண்டு பொருட்களில் வார்லி ஆர்ட் கலையை வரைவது, வாழ்த்து அட்டைகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் தயாரித்து வந்தேன். வெறும் நூலினை பயன்படுத்தி நான் தயார் செய்த பலூன்கள் குழந்தைகளை கவர்ந்தது.

குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், சுற்றியிருப்பவர்களுக்கு ஏதேனும் பொருட்களை தயாரித்து செய்து கொடுத்து வந்தேன். அதைத் தொடர்ந்து ஆன்லைனிலும் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கி வந்தேன். சிறுவர்களுக்காக சம்மர் கேம்ப் போன்றவற்ைறயும் நடத்தினேன். நான் தயாரிக்கும் பொருட்களை பார்த்து பலர் தங்களின் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரித்து தரும்படி கேட்டனர். அப்போதுதான் இதையே சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பிசினஸாக மாற்றலாம் என்ற யோசனை வந்தது. ட்ராஷ் டூ ட்ரெஷர் எனும் கான்செப்ட்டில் ‘Eco Sparkles by Kirti’ எனும் ப்ராண்டை உருவாக்கினேன்’’ என்றவர் அதில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பற்றி விவரித்தார்.

‘‘வார்லி கலை ஓவியங்கள் கொண்டு பல கைவினைப் பொருட்களை தயார் செய்தேன். குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், வார்லி ஓவியம் வரையப்பட்ட ஃபிரேம்கள். இதனை திருமண நிகழ்வில் ரிட்டர்ன் கிஃப்டாக கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து குழந்தைகளின் பிறந்தநாள் அலங்காரம், அதில் பிறந்தநாள் வாழ்த்து, தலையில் போட்டுக்கொள்ளும் தொப்பி போன்றவற்றை காகிதம் மற்றும் துணிகள் கொண்டு தயாரித்தேன்.

இதனால் குழந்தைகளின் மனதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். அதனைத் ெதாடர்ந்துதான் விதைகள் வைத்து தயாரிக்கப்பட்ட சீட் ராக்கி, புத்தகக்குறி அட்டைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், தீபாவளி விளக்குகள், விதை பட்டாசுகள், தீபாவளி பரிசுப் பொருட்கள், பண்டிகை கால வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல், பண்டிகைக்கு ஏற்ப தயாரிக்கிறேன். வீட்டில் இருந்தபடி நான் மட்டுமே இந்த வேலைகளை செய்வதால், பெரும்பாலும் ஆர்டர் பேரில்தான் பொருட்களை தயார் செய்கிறேன். பிசினஸ் என்பதைவிட மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நிலைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். இந்த தீபாவளியை விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்’’ என்று வாழ்த்தினார்.

ரம்யா ரங்கநாதன்