Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘குட்டி ஜப்பானில்’ தீபாவளி சேல்ஸ் செம தூள்; ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை; கடந்தாண்டை விட ரூ.1,000கோடி அதிகம்

சிவகாசி: சிவகாசியில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி இருப்பதாக, உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முதலில் பட்டாசுதான். பட்டாசு உற்பத்தியைப் பொருத்தவரை, இந்தியாவில் குட்டி ஜப்பான் எனப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் விற்பனையாகிற பட்டாசுகளில், 90 சதவீதம் இங்கிருந்துதான் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலைகளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், இதன் உபதொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாடு முழுவதிலும் 1.50 கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டை விட ரூ.1,000 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு பட்டாசு உற்பத்தியின்போது, தொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு, விபத்துகளில் நடந்த உயிரிழப்பு, தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வு போன்றவற்றால் பட்டாசு உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தபோதிலும் நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில், 95 சதவீத பட்டாசுகள் விற்பனையானதாகவும், நடப்பாண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டதால் விற்பனை அதிகரித்து இந்தியா முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, சரவெடி தயாரிக்கவும் அனுமதித்தால் வரும் காலங்களில் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் என்றனர்.

தொடர்ந்து அதிகரிப்பு

2016 முதல் 2019 வரை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020ல் ஒட்டுமொத்த விற்பனை முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது. தொடர்ந்து 2021ம் ஆண்டு ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து 2022ல் தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது. மேலும் 2023 மற்றும் 2024ல் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் பட்டாசு விற்பனையாகி உள்ளது.