நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தீபாவளி விற்பனை அமோகம்: விடுமுறை நாளில் ஜவுளி, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
நெல்லை: தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படும் நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜவுளி, பட்டாசுகள், பலசரக்கு விற்பனை களை கட்டியது. இதன் காரணமாக நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பாளை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி, காணப்பட்டது. தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கடைசி இரு தினங்கள் விற்பனை எப்போதுமே களைகட்டுவது வழக்கம். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஜவுளி, பட்டாசு, பலசரக்கு சாமான்கள் விற்பனை களைகட்டியது.
நெல்லையில் கடந்த இரு நாட்களாக விடாது மழை கொட்டித்தீர்த்த நிலையில், நேற்று மழை சற்று ஓய்வெடுத்தது. இதனால் காலை முதலே தீபாவளி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்களும் சிரமமின்றி தீபாவளி பொருட்களை வாங்கினர். ரெடிமேட் ஆடைகள், இனிப்பு வகைகள். பட்டாசுகள், ஜவுளி ரகங்கள் எடுத்துச்செல்ல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நெல்லையில் குவிந்தனர். மக்கள் கூட்டம் காரணமாக நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளை. மார்க்கெட், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. இப்பகுதிகளில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் ஜவுளி மற்றும் பட்டாசுகள் வாங்கி செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது.
பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கிப்ட் பாக்ஸ்கள், சில்லறை விலையில் தரை சக்கரம், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் என குழந்தைகள் விரும்பும் பட்டாசு ரகங்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர். அதேபோல் தீபாவளிக்கே உரித்தான முந்திரி கொத்து, சுசியம், அச்சுமுறுக்கு வாங்கி செல்லவும் பாளை. மார்க்கெட், பேட்டை, நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், மகாராஜநகர் பகுதியில் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் ரதவீதிகளில் ஆயத்த ஆடைகள், பெண்களுக்கு தேவையான வளையல், சாந்துபொட்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம். பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய நகரங்களில் உள்ள ஜவுளி மற்றும் பாத்திரக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோர பட்டாசு கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. ஜவுளி கடைகளில் பெண்களுக்கான பிரிவுகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், உடன்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பட்டாசு கடைகளிலும் விற்பனை களைகட்டியது. நெல்லை மாநகரில் தீபாவளிக்கு ஒரு சில மொபைல், பர்னிச்சர் கடைகள் அதிரடி தள்ளுபடியை அறிவித்திருந்தன. இக்கடைகளிலும் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நெல்லை மாநகரில் முக்கிய இடங்களில் தீபாவளி விற்பனையை ஒட்டி அதிகளவில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வாகன போக்குவரத்தை சரி செய்ததோடு, பெண்கள், குழந்தைகள் சாலைகளை கடந்து செல்லவும் அவர்கள் உதவி செய்த வண்ணம் இருந்தனர்.
* பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்
சென்னை, விழுப்புரம், சே லம், கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பணி நிமித்தமாக வசித்து வரும் தென்மாவட்ட மக்கள் தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சுமார் 350 சிறப்பு பஸ்களை கடந்த 16ம் காலை முதல் சென்னை உள்ளிட்ட பிற இடங்களுக்கு இயக்கியது. விரைவு போக்குவரத்து கழகம் மூலம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பணிமனைகளில் இருந்து சுமார் 150 பஸ்கள் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.
இவைகள் தவிர சென்னையில் இருந்து நெல்லை, குமரி, செந்தூர், பொதிகை, குருவாயூர், அனந்தபுரி, அந்தியோதயா உள்ளிட்ட ரயில்களிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பயணிகள் நேற்று காலையில் வந்திறங்கினர். இதனால் நெல்லை ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்காக நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட், சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் ஆகிய பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து கிராமங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தீபாவளி சிறப்பு பஸ்களின் இயக்கத்தை நெல்லை புதிய பஸ்நிலையத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், டைம்கீப்பர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாதுகாப்புடன் பஸ்களை இயக்க வேண்டும். அதே நேரத்தில் விபத்தில்லா பயணங்களை மேற்கொள்ள வேண்டி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.