தீபாவளி பண்டிக்கைக்காக வரத் தொடங்கிய ஆர்டர்கள்: திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
திருப்பூர் : தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளதால் திருப்பூரில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என அழைக்கப்படும் திருப்பூர் சர்வதேச சந்தையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இதன் முக்கிய சந்தைகளாக உள்ளன. அமெரிக்காவின் அடுத்தடுத்து வரி விதிப்பு காரணங்களால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தவிர திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது.
பருத்தி நூலிழை ஆடைகள், பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் நாடுமுழுவதும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பண்டிகை கால ஆர்டர் மீதான வர்த்தகம் விசாரணை தொடங்கியுள்ளதால் உற்பத்தியை துவங்க திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். உள்நாட்டு உற்பத்திக்கு தமிழக அரசு துணை நிற்கக் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.