*பெண் ரயில் பயணிகளின் அதிர்ச்சி வீடியோ வைரல்
திருப்பூர் : ஒன்றிய அரசு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கிடையே செல்லும் ரயில்களுக்கான முறையான வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது அந்த ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகளும் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லக்கூடிய 22669 என்ற ரயிலில் பயணித்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சிலர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தங்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில் , கடந்த 11ம் தேதிக்கு 22669 என்ற பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து காட்பாடிக்கு புறப்பட்டதாகவும், இந்த ரயில் 12ம் தேதி திருப்பூர் நிலையத்திற்கு வந்தபோது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் ஏறியதாகவும் அவர்களில் சிலர் முன்பதிவு செய்யாத டிக்கெட் வைத்திருந்ததாகவும் மற்றும் சிலர் டிக்கெட்டே இல்லாமல் ஏறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரிசர்வ் செய்த பயணிகள் சௌகரியமான பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இடையூறுக்கு உள்ளானதாகவும், இதுகுறித்து ரயில் டிடிஆர் மற்றும் ஆர்பிஎப் வீரர்களிடம் தெரிவித்த போது அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் கடந்து சென்று விட்டதாகவும், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் அபராத கட்டணத்தை வசூலித்த டிடிஆர் சிலர் அவர்களை பொது பெட்டிக்கு அல்லது ரயிலில் இருந்த இறங்கவோ செய்யாமல் அமைதியாகச் சென்றனர்.
ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டியில் குழந்தைகளை வைத்திருந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் பாத்ரூம் கூட செல்ல முடியாத வகையில் வழி நெடுகிலும் டின்கள், துணி மூட்டைகள், பாத்திரங்களோடு அமர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் சற்று தள்ளி வழி விடுமாறு கூறினாலும் கூட கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து இருந்ததாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து டிடிஆர்களிடம் தெரிவித்த போது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் கடந்து சென்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்பிஎப் விளக்கம்
பெண்கள் புகார் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரும் வைரலான நிலையில் இந்த வீடியோவின் கீழ் ஆர்பிஎப் என்ற பெயரில் கமெண்ட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் , வீடியோவில் பதிவிட்டுள்ள புகார் குறித்து தகவல் பெறப்பட்டவுடன் காட்பாடியில் S6 மற்றும் S7 பெட்டிகளில் ஆர்பிஎப் ஊழியர்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்த 5 பயணிகளையும் , ஜோலார்பேட்டையில் 10 பயணிகளையும் அபராதம் விதித்து பொதுப்பெட்டிக்கு மாற்றியதாக தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலில் பயணிகள், பெண்கள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதில் ஆர்பிஎப் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.