தீபாவளி முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை!!
திண்டுக்கல்: தீபாவளி முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகி இருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க அதிகளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில், வருகின்றன 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இன்று அய்யலூரில் சந்தை கூடியது. அதிகாலை 3மணி முதல் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியது. கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் போதாததால் சந்தைக்கு வெளியே சர்விஸ் சாலை முழுவதும் கூட்டம் அலைமோதியது.
வியாபாரிகள் போட்டிபோட்டு கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி சென்றனர். இன்று 10கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8,500 வரையிலும் செம்மறியாடு ரூ.8,000 வரையிலும், 1 கிலோ நாட்டுக்கோழி ரூ.450 வரையிலும் சண்டை பயன்படுத்தும் கட்டு சேவல் அதிகபச்சமாக ரூ,15,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அய்யலூரில் இன்று நடைபெற்ற சந்தையில் ஒரு நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.