விவாகரத்து வழக்கில் திருப்பம் போதிய வருமானம் உள்ள பெண் ஜீவனாம்சம் பெற தகுதியில்லாதவர்: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
பிரயாக்ராஜ்: உபியை சேர்ந்த கணவன்-மனைவி விவாகரத்து வழக்கை விசாரித்த கவுதம் புத்தா குடும்ப நல நீதிமன்றம், பிரிந்த மனைவிக்கு மாதம் ரூ.5,000 ஜீவனாம்சம் வழங்க கணவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பால் சிங், ஜீவனாம்சம் வழங்கும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி தனது உத்தரவில், ‘‘மனுதாரரின் மனைவி அவரது பிரமாண பத்திரத்தில், முதுகலை பட்டதாரி என்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த விற்பனை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி மாதம் ரூ.34,000 சம்பளம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறுக்கு விசாரணையில் மாதம் ரூ.36,000 சம்பளம் பெறுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். வேறெந்த பொறுப்புகளும் இல்லாத அவருக்கு தன்னைத் தானே பராமரிக்க இது போதுமான வருமானம்.
அதே சமயம் மனுதாரருக்கு அவரது பெற்றோரை கவனித்துக் கொள்வது உள்ளிட்ட சமூக பொறுப்புகள் உள்ளன. எனவே, சட்டப்பிரிவு 125ன் கீழ் போதுமான வருமானம் ஈட்டும் பெண் ஜீவனாம்சம் பெற தகுதியற்றவர் ஆகிறார். மேலும், கீழ் நீதிமன்றத்தில் மனுதாரரின் மனைவி தன்னை ஒரு படிப்பறிவு இல்லாத பெண் என்றும் எந்த வருமானமும் இல்லை என்றும் பொய்யான தகவல் கூறி உள்ளார். அவர் உண்மையான காரணத்துடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது தெரிகிறது. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.


