திண்டிவனம்: திண்டிவனத்தில் வரும் 18ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நிறுவனர், தலைவர் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நாளை மறுநாள்( 15ம் தேதி) காலை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் வரும் 18ம் தேதி பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. மறு நாள் 19ம் தேதி இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை கூட்டத்தில் 200 பேரும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 400 பேரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர்கொள்வது குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராமதாஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க சீனியர் தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணியை துரிதப்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
