ராணிப்பேட்டை: பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திராவின் கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 340 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் பொன்னை ஆற்றில் மக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பியதை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீரால் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களான பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் திருவலம் அருகே உள்ள வெப்பாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (60) என்பவர் வெப்பாலை அருகே பொன்னை ஆற்றின் மையப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த வெள்ளத்தில் முதிவரும் அவரது மகனும் சிக்கிக்கொண்டனர். ஆடுகளும் சிக்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் சென்ற தீயணைப்பு மீட்புக் குழுவினர் ஆற்றில் இறங்கி, ஜெயசீலனையும், அவரது மகனையும் மீட்டனர். 10 ஆடுகளும் மீட்கப்பட்டது. மேல்பாடி போலீசாரும் மீட்புப் பணியில் உதவினார்கள்.