சென்னை: தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நேற்று கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது.
மேலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும். இதேநிலை நாளையும் தொடரும். இதையடுத்து அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
