Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கிராமப்புற நிர்வாகத்தைப் பலப்படுத்தும் நோக்கில், மொத்தம் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.

வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். அந்தந்த தாலுகா பகுதியில் வசிப்பவராகவும், தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு 1.7.2025 தேதியின்படி, உச்சப்பட்ட வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு பிரிவினர் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வரை இருக்கலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியவர்கள் 18 முதல் 37 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள் 18 முதல் 50 வயது வரை இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், ஆதிதிடாவிடர், பட்டியல் பழங்குடியினர் பிரிவு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 55 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும். ஊராட்சி செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 2 கீழ் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ் மற்றும் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். இப்பணிக்கு நவம்பர் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கி, வரும் நவம்பர் 9ம் தேதி நிறைவடைகிறது. அதன்பின், நவம்பர் 10 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிசம்பர் 3ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

பின்னர், டிசம்பர் 4 முதல் 12ம் தேதி வரை மாவட்டங்களின் அளவில் நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேர்காணல்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். நேர்காணல் குழுவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், மற்றும் ஆட்சியரின் வளர்ச்சி உதவியாளர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ம் தேதிக்குள் வெளியிடப்படும். இதை தொடர்ந்து, டிசம்பர் 17ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 செலுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.