Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டியில் நாய்களுக்கான ‘பெட் பார்க்’ பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

ஊட்டி : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா (Pet Park) அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மனிதனுக்கான செல்லப்பிராணிகள் பட்டியலில் நாய்கள் முதலிடம் வகிக்கிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் நாய்களுடன் நடைபயிற்சி செய்வதை பலரும் விரும்புகின்றனர்.

சுற்றுலா தலமான ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் சிலர் நாய்களை அழைத்து வரும்போது, அவைகளை பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாமல் தனியாக அவர்கள் தங்கும் அறைகளிலேயே அடைத்துவிட்டு செல்கின்றனர்.

இதை தவிர்ப்பதற்காகவும், நாய் வளர்ப்பவர்கள் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதற்காகவும் நாய்களுக்கான சிறப்பு பூங்கா ஊட்டியில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டம், ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள், புற்களால் அமைக்கப்பட்ட சுரங்க பாதை, காய்ந்த இறகு மூலம் செய்யப்பட்ட குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இப்பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பூங்கா திறக்கப்பட்டால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் தங்களது வளர்ப்பு நாய்களை இந்த பூங்காவிற்கு அழைத்து செல்ல முடியும்.

மேலும், அவை விளையாடவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் இப்பூங்கா உதவியாக அமையும்.

இந்நிலையில், பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடந்துவரும் நிலையில், விரைவில் இப்பூங்கா திறக்கும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளுமாறும், தடுப்பு வேலி மற்றும் அடையாள பலகை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள இளைஞர் விடுதியில் தங்கும் அறை, கழிப்பறை, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சூர்யபிரகாஷ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.