Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட மைய நூலகத்தில் 2 ஆயிரம் பள்ளி மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு

*வாசகர்கள் வருகை அதிகரிப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட மாணவ- மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், 2 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் 1.65 லட்சம் நூல்கள் உள்ள நிலையில், வாசகர்கள் வருகை அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், ஒரு மாவட்ட மைய நூலகம், 6 முழு நேர நூலகங்கள், 27 கிளை நூலகங்கள், 69 ஊர்ப்புற நூலகங்கள், 33 பகுதிநேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன.

இந்த 137 நூலகங்களிலும் 24.07 லட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. வாசகர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் தினசரி வந்து நாளிதழ், புத்தகங்களை படித்து செல்கின்றனர். 1500க்கும் மேற்பட்டோர் புரவலர்களாக உள்ளனர். நூலக உறுப்பினர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1.65 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. பொது அறிவு, வரலாறு, அரசியல், நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியம், சிறுவர்கள், மகளிருக்கு என தனித்தனி நூல்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு, தினசரி போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி 600க்கும் மேற்பட்ட வாசகர்களும் வருகின்றனர். தினசரி நாளிதழ்கள் மற்றும் நூல்களை விரும்பி படித்துச் செல்கின்றனர். நன்கொடையாளர்கள், புரவலர்கள் என 280 பேர் உள்ளனர். மாவட்ட மைய நூலகம் 2 தளத்துடன் செயல்பட்டு வருகிறது.

தரைதளத்தில் முதல் நிலை நூலகர் அறை, சிறுவர் பிரிவு, மகளிர் பிரிவு, செவி மற்றும் பேச்சுத்திறனற்றோர் பிரிவு, நாளிதழ், பருவ இதழ் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, நூல்கட்டும் பிரிவு, நூல் இரவல் பிரிவு, புதிய நூல்கள் பிரிவு உள்ளிட்டவை உள்ளன. முதல் தளத்தில் குடிமைப்பணிப் பிரிவு, குறிப்புதவி பிரிவு உள்ளன. 2ம் தளத்தில் சொந்த நூல்கள் பயிலும் பிரிவு உள்ளன.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் கூடும் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் அரூர், பென்னாகரம் ஆகிய 3 இடங்களில் புதிய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்கம் சார்பில், மாணவ-மாணவிகளிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக, நூலகங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே வாசிப்பு திறனை வளர்க்கும் விதமாக விழிப்புணர்வு முகாம், பயிலரங்கம், புதிய நூல்கள் கண்காட்சி மற்றும் தேசிய நூலக வார விழா நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரி அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், 3 புதிய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே வாசிப்பு திறனை வளர்க்க, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து, இதுவரை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாசிப்பு பழக்கம், மிகவும் அரிதாகி கொண்டே இருக்கிறது.

சலிப்பான ஒரு சூழலில் இருக்கும்போது, புத்தகங்களை வாசித்தால், இதயத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். அரசு பணி, மருத்துவத் துறை, தொழில் துறை உள்பட எந்த ஒரு துறையிலுமே, வெற்றியாளர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை போன்றவற்றுடன் வாசிப்பு என்கிற பழக்கம் மிக அதிகமாக இருக்கும். வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.

அல்லது வெற்றியாளர்களிடம் வாசிப்பு பழக்கம் நிச்சயம் இருக்கும். இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதனை பிரிக்க முடியாது. தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் 1.65 லட்சம் நூலகங்கள் உள்ளன. இதனை மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.