லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுமயங்குடியை சேர்ந்த புவியரசன் மகன் ஹரிஹரகுமார்(26). ஐடிஐ முடித்து விட்டு போர்வெல் குழாய் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சற்குணம்(26). விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காளியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை கடந்த 30ம்தேதி இரவு ஊர்வலமாக எடுத்து சென்று வாய்க்காலில் கரைக்கப்பட்டது. அப்போது ஹரிஹரகுமாருக்கும், சற்குணத்துக்கும் தகராறு ஏற்பட்டது. மற்றவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காளியம்மன் கோயில் அருகே நின்று ஹரிஹரகுமார் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அங்கு பன்னீர்செல்வம், மகன் சற்குணம் மற்றும் நண்பர்கள் முகிலன், சஞ்சய், சரவணன் ஆகியோர் வந்தனர். அப்போது விநாயகர் சிலை கரைப்பு தகராறு பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம், சற்குணம் ஆகியோர் ஹரிஹரகுமாரை சரமாரி தாக்கினர். இதில் தடுமாறி விழுந்த அவரது தலையில் கல்லை தூக்கி போட்டதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வம், சற்குணம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.