Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இணையமைச்சர் பதவி வழங்கியதால் அதிருப்தி சுரேஷ்கோபி பதவி விலகத் திட்டம்?

திருவனந்தபுரம்: கேரளாவில் கடும் போராட்டத்திற்கு இடையே பாஜ கணக்கை தொடங்கியும், தனக்கு இணையமைச்சர் பதவி வழங்கியதில் நடிகர் சுரேஷ் கோபிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். கேரளாவில் கடந்த 2019ம் ஆண்டு வரை நடந்த பல நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜவால் கணக்கை தொடங்க முடியாத நிலை இருந்தது. 2 தேர்தல்களில் திருவனந்தபுரத்தில் மட்டும் 2வது இடத்திற்குத் தான் வரமுடிந்தது.

இந்த நிலையில் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளாவில் கிடைத்த இந்த முதல் வெற்றியை பாஜ பெரும் சாதனையாக கருதி வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜ கூட்டணி எம்பிக்கள் இடையே பிரதமர் மோடி பேசும்போது, கேரளாவில் கிடைத்த வெற்றி குறித்து பெருமையாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே சுரேஷ்கோபி இதே திருச்சூர் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சூரில் வெற்றி பெற்றால் சுரேஷ் கோபிக்கு கேபினட் அந்தஸ்துடன் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி உறுதி என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது சுரேஷ் கோபிக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ் கோபிக்கு 4 படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் தான் அவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜ தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 4 படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள போதிலும் கேபினட் அந்தஸ்துடன் அமைச்சர் பதவி கிடைத்தால் படங்களில் நடிப்பதை தள்ளி வைக்க சுரேஷ் கோபி தீர்மானித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் இணை அமைச்சர் பதவி வழங்கியது சுரேஷ் கோபிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆகவே படங்களில் நடித்து முடிக்கும் வரை தன்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் பாஜ தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய இணை அமைச்சர் பதவி எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும், எனவே நான் பதவி விலகப் போவதாகவும் வெளியான தகவலில் எந்த உண்மையும் கிடையாது.

மோடியின் மந்திரிசபையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதை நான் கவுரவமாக கருதுகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்தப் பதவியின் மூலம் நான் கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சுரேஷ் கோபி பதவி விலக முடிவு செய்தது உண்மைதான் என்றும், பாஜ மேலிடத் தலைவர்கள் நேரடியாகப் பேசி சமாதானப்படுத்தியதால் தான் அவர் தன்னுடைய முடிவை தற்போது மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* 10 துறைகளில் நடவடிக்கை எடுக்க உரிமை

திருச்சூரில் வெற்றி பெற்றவுடன் சுரேஷ் கோபி கூறுகையில், குறைந்தது 10 துறைகளில் நடவடிக்கை எடுக்கும் வகையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு பாஜவுக்கு எம்பி இல்லாததால் அந்த மாநிலத்திற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் எனக்கு பதவி கிடைக்க வேண்டும் என்று கூறினார்.