*கலெக்டர் நேரில் ஆய்வு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், தட்பவெப்ப நிலை காரணமாக 200 ஏக்கர் நெற்பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நெல் வயலை கலெக்டர் சதீஸ் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், கடத்தூர், மொரப்பூர், அரூர், பொம்மிடி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதுகுறித்து கடந்த 28ம்தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக கடத்தூர், மொரப்பூர், அரூர் பகுதிகளில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய நெல் வயலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், கடத்தூர், மணியம்பாடி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், தொடர் மழைப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் காரணமாக, 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கப்பட்ட நெல் வயல் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கி, அதில் குறிப்பிட்டுள்ள பூச்சி நோய் மேலாண்மைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். நோய் தாங்கி வளரும் ரகங்களை பயிர்செய்ய வேண்டும். நோயற்ற விதைகளை பயன்படுத்தவும், வயலில் நீரை வடி கட்ட வேண்டும் (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர), களைகள் மற்றும் மாற்று பயிர்களை அழித்தல் வேண்டும்.
மேலும், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி அளித்தல் போன்ற மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். மேலும் நெல்லில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் பாதிப்பு குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நெல் பயிரில் நோய் தாக்குதல் குறித்து விவசாயிகள் கண்டறிந்து தெரிவிக்கும் நிலை உள்ளது. வேளாண் அதிகாரிகள், பாப்பாரப்பட்டி அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண் விஞ்ஞானிகள் களத்தில் சென்று ஆய்வுசெய்து, நோய்களை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டவேண்டும். விவசாயிகள் வங்கியில் கடன் வாங்கி நெல் பயிரிட்டுள்ளனர். எனவே. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரத்தினம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ரா, வேளாண்மை துணை இயக்குநர் ராஜகோபால், வேளாண்மை உதவி இயக்குநர் பழனிவேல், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் சிவக்குமார் மற்றும் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.