*மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
நாகர்கோவில் : கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் அழகுமீனா மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:
குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை 100 சதவீதம் கொண்டு வரும் வகையிலும், 12ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களை 12ம் வகுப்பிற்கு பின் சிறந்த முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற்றிட செய்யும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களிடம் 100 சதவீதம் தேர்ச்சிக்கு இடையூறாக மாணவர்களின் ஒழுங்கற்ற வருகை காணப்படுவதால், மாணவர்களை ஒழுங்காக பள்ளிக்கு வருகை தர அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் படிப்பினை மட்டுமே முழுமுதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டுமெனவும், தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியமான காலக்கட்டம் 12ம் வகுப்பு, எனவே உயர் மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதை லட்சியமாக கொண்டு தொடர்ந்து வருகின்ற 3 மாதகாலம் கடின உழைப்புடன், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பெற்று நன்றாக படிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
12ம் வகுப்புக்கு பின் சேர்வதற்கான உயர்கல்வி சார்ந்த வாய்ப்புகள் எவை எவை காணப்படுகின்றன என்பதனை திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் பெரும்பான்மையாக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதாகவும், மாணவிகள் பெருவாரியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதால் மாணவர்களுக்கும், அவர்கள் சார்ந்த பெற்றோருக்கும் ஏற்படுகின்ற நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த சிரமங்களை தராது தாமாக குறைந்த செலவில் சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வது எப்படி என்பதையும், முறையாக 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சிறந்த முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக பெற்றுக் கொள்ள வேண்டிய கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வருடம் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பெற்ற சிரமங்களை எடுத்துகூறி, இனிவரும் காலங்களில் இத்தகைய சிரமங்களுக்கு மாணவர்கள் உள்ளாகாமல் இருக்க என்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
ஒழுங்காக பள்ளிக்கு வருதல் என்பது கற்றலுக்கான முதற்படி. எனவே மாணவ செல்வங்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருகை புரிவதோடு முதன்மை பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்று சிறந்த கட் ஆப்க்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் முதன்மை பாடங்களில் மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதற்காக உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனிமனித மேம்பாட்டிற்கு ஒழுக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
எனவே மாணவர்கள் ஒழுக்கம் நிறைந்த நல்ல பழக்கவழக்கங்களை பள்ளி பருவம் முதலே கடைபிடித்து நடக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண் கல்வி
பெண் குழந்தைகள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தை வளம் நிறைந்ததாக கொண்டுவர கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு பெண் கல்வி கற்றால் தான் தங்களது குடும்பத்தை நன்றாக நடத்துவதோடு பொருளாதார மேம்பாட்டையும் அடைய செய்ய இயலும் என கலெக்டர் தெரிவித்தார்.
