ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகள் ராமதாஸ் விதித்த கெடு குறித்து பதிலளிக்க மறுத்த அன்புமணி
தர்மபுரி, செப்.5: ராமதாஸ் விதித்த கெடு குறித்து பதிலளிக்க அன்புமணி மறுத்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார். பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. பாமக மாநில நிர்வாக குழு தைலாபுரத்தில் கூடி ஆலோசனை நடத்திய நிலையில், 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சேலம் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த அன்புமணியிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று 2வது முறையாக உங்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் 4ம் தேதி (நேற்று) பதில் அளிப்பதாக கூறி விட்டு, காரில் புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து நேற்று தர்மபுரியில் முன்னாள் பாமக எம்பி இல்ல திருமண நிகழ்ச்சியில் அன்புமணி கலந்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர் நிருபர்கள், அன்புமணியிடம் கெடு பற்றி கேட்டதற்கு அவர் வேண்டாம், வேண்டாம் என்று கூறி விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து சேலம் விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார். அப்போதும் நிருபர்கள், கெடு குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்காமல் சென்று விட்டார்.
தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி: அன்புமணி பேச்சு
தர்மபுரியில் பாமக முன்னாள் எம்பி மகன் திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘இது கல்யாண மேடை. எனவே, அரசியல் பேசப் போவதில்லை. தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வளர்ச்சி இல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ’ என்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மேச்சேரிக்கு அன்புமணி சென்றார். அங்கு பாமக சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் அன்புமணி பேசுகையில், ‘தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும். எனவே அனைவரும் ஆர்வமுடன், விருப்பமுடன் கட்சி பணியாற்றுங்கள்’ என்றார். பின்னர் அவர் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
கட்சி நிகழ்ச்சிகளில் மகளை களமிறக்க ராமதாஸ் முடிவு
பாமக செயல் தலைவர் பதவியில் தனது மூத்த மகள் காந்தியை அமர வைப்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். அன்புமணிக்கு போட்டியாக அவரை களமிறக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்று வந்த காந்தி, தற்போது கட்சியின் மாவட்ட, தொகுதி அளவிலான பரிசளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மேடை ஏற உள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக கும்பகோணத்தில் நாளை (6ம் தேதி) நடைபெறும் மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் காந்தி கலந்து கொள்கிறார். அதாவது ராமதாஸ் செல்ல முடியாத நிகழ்ச்சியில், அவரது சார்பில் காந்தி அடுத்தடுத்த கட்சி பொது நிகழ்வுகளிலும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.