புதுடெல்லி: இயற்கை பேரிடர்களை திறம்பட கையாளவும், பேரிடர்களால் ஏற்படும் அசவுகரியங்கள், உயிரிழப்புகளை பூஜ்ஜியமாகவோ அல்லது குறைவாகவோ உறுதி செய்யும் நோக்கத்துடன் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, தடுப்பு, தணிப்பு மற்றும் தயார்நிலை பணிகளை வலுப்படுத்த பேரிடர்களுக்கு என தனித்தனி அமைச்சகங்கள், துறைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பனிச்சரிவு, எண்ணெய் கசிவுகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் கையாளப்படும் குளிர் அலை, சூறாவளி, பூகம்பம், வெப்ப அலை, மின்னல், சுனாமி, ஆலங்கட்டி புயல்கள் மற்றும் கனமழை ஆகியவற்றிற்கு புவி அறிவியல் அமைச்சகம் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உயிரியல் பேரிடர்களை கவனித்துக் கொள்ளும்.
பனி மற்றும் குளிர் அலை, வறட்சி, ஆலங்கட்டி மழை மற்றும் பூச்சி தாக்குதல் ஆகியவற்றுக்கான பொறுப்பு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெள்ளம், பனிப்பாறை வெடிப்பு வெள்ளம் ஆகியவற்றையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற வெள்ளங்களையும் கவனித்துக் கொள்ளும்.
காட்டுத் தீ, தொழில்துறை மற்றும் ரசாயன பேரழிவுகள் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமும், நிலச்சரிவுகளை சுரங்க அமைச்சகமும் கையாளும். அணுசக்தி மற்றும் கதிரியக்க அவசரநிலைகளை அணுசக்தித் துறை கவனிக்கும்.