Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை, புறநகர் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மையங்கள் ரூ.36 கோடியில் அமைக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவிப்பு

பேரவையில் வருவாய்த்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: புயல், அதி கனமழை வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் ரூ.36 கோடியில் அமைக்கப்படும். தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.

பேரிடர்களின்போது அபாய எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒலி எழுப்பும் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் ரூ.13.25 கோடியில் நிறுவப்படும். பேரிடர்கால மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் ரூ.105.36 கோடியில் வாங்கப்படும். காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக வனத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் ரூ.15 கோடியிலும், மீனவர்களுக்கும், மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சி ரூ.1.07 கோடியிலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.2.10 கோடியிலும் வழங்கப்படும்.

பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் வசிக்கும் தன்னார்வலர்களுக்கு முதலுதவி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி ரூ.6.05 கோடியிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களில் உள்ள 500 தன்னார்வலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் ரூ.2 கோடியில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படும்.

பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப அலைதாக்கத்தை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டாவும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் மற்றும் நகரத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டாவும், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஊர்க்காடு வருவாய் கிராமத்தில் 1800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படும்.

வருவாய்நிலை ஆணை 21ன் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் வீட்டுமனை ஒப்படை ஆணைகள் இணையவழியில் வழங்கப்படும். நவீன நிலஅளவை கருவியைப் பயன்படுத்தி பராமரிப்பு நில அளவை செய்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும். பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணையவழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். பத்திரப்பதிவின்போது சொத்து விவரங்களை சரிபார்க்க ஏதுவாக, புலப்படத் தரவுகள் பதிவுத்துறைக்கு பகிரப்படும்.

பட்டா மாற்றம் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும்பொருட்டு தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். மதுரை மற்றும் கோவையில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். தேனி மாவட்டத்தில் டி.கள்ளிப்பட்டி, தென்காசி மாவட்டத்தில் மேலகரம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் திப்ரமகாதேவி மற்றும் பேளூக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 3,589 குடும்பங்களுக்கு நத்தம் நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொண்டு மனைப்பட்டா வழங்கப்படும். இவ்வாறு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.