Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏமாற்றம் தந்த மினி வர்த்தக ஒப்பந்தம்; டாலர் சிட்டியை டல் சிட்டியாக மாற்றிய டிரம்ப்பின் 25% வரி விதிப்பு

சர்வதேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவனம் பெற்றது திருப்பூர் நகரம். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கடல் கடந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து வந்தாலும் கூட திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகளில் 35 சதவீதம் வரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. திருப்பூரில் இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வளம் குன்றா வளர்ச்சி அடிப்படையில் பசுமை சார் உற்பத்தியில் ஆயத்த பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுவதால் திருப்பூரின் ஆயத்த பின்னலாடைகளுக்கு அமெரிக்காவில் தனி மதிப்பு உள்ளது. இதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்து வந்தது. கடந்த 2014-15ம் நிதி ஆண்டுகளில் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு 9,910 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் 18,618 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த மற்றும் ஜவுளி ஆடைகளுக்கு 6.9% இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு 10 சதவீதம் கூடுதல் வரி உயர்வை அமலுக்கு கொண்டு வந்ததன் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 16.9% வரை வரி விதிப்பு அமலில் இருந்து வந்தது. இருப்பினும் கூட இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு இதை விட கூடுதலான வரி விதிப்பு அமலில் இருந்ததால், இந்தியா அமெரிக்கா உடனான வர்த்தக உறவு ஆரோக்கியமான முறையிலும், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு அமெரிக்க வர்த்தகர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவிற்கு 25% வரி உயர்வு அறிவித்துள்ள அமெரிக்கா வரும் 7ம் தேதி முதல் அதை அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் போட்டி நாடுகளாகவும், ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு போட்டியாக இருந்து வந்த வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வரியை குறைத்து இருப்பதன் மூலம் அமெரிக்க வர்த்தகர்கள் திருப்பூரை தவிர்த்து மற்ற நாடுகளுடன் பின்னலாடை வர்த்தகத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் அமெரிக்கா போட்டி நாடுகளுக்கு விதித்த வரிவிதிப்பு காரணமாக கடந்த நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த பின்னலாடை வர்த்தகம் 45 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இமாலய இலக்கை எட்டியது. 2025-26ம் ஆண்டிற்குள் ரூ.50 ஆயிரம் கோடி, 2030ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில் அமெரிக்கா உடன் வரி குறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் 5 கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. முழுவதுமாக இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாக ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பரஸ்பர வரி தொடர்பாக மினி வர்த்தக ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக அதிரடியாக இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25% அபராத வரி விதிப்பு திருப்பூர் ஆயத்த பின்னலாடை உற்பத்தி துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு என்பது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வரி விதிப்பு காரணமாக அந்நாட்டு மக்கள் இந்தியாவின் பொருட்களை வாங்குவதை குறைத்துக்கொள்வது வழக்கம். இருப்பினும், ஆயத்த ஆடை இறக்குமதி செய்வதில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. இந்தியாவிற்கு வரி உயர்வை அறிவித்த அமெரிக்க அதிபர் ஆயத்த ஆடைத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளுக்கான வரியை குறைத்திருப்பதன் மூலம் ஆயத்த பின்னலாடை ஏற்றுமதி பெருமளவு பாதிப்பை சந்திக்கும்.‌

அமெரிக்க வர்த்தகர்கள் வரிக்குறைவு என்பதால் வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆர்வம் காட்டும் வாய்ப்பு உண்டு. திருப்பூரிலிருந்து 30 சதவீதம் வரையிலான ஆடைகள் மட்டும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதி 70% மற்ற நாடுகளுக்கு என்பதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி மிகப்பெரும் பாதிப்பை சந்திக்காது. ஆனால், அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்குள்ளாக ஒன்றிய அரசு தொடர்ந்து அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த வேண்டும். அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பால் ஏற்படும் சரிவை ஈடுகட்ட உற்பத்தி துறையினருக்கு மானியம் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: இந்தியாவிற்கான வரி விதிப்பை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதன் மூலம் ஆயத்த ஆடை துறை சற்று சரிவை சந்திக்க கூடும். நட்பு நாடு என்ற ரீதியில் இருந்து வந்த அமெரிக்கா இந்தியாவிற்கு பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போட்டி நாடுகளான வங்கதேசம், சீனா உள்ளிட்டவை தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சி அடைந்திருப்பதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்து, உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி செய்யக்கூடும். தொழில்நுட்ப ரீதியில் அவர்களுடன் போட்டிபோட்டு கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறை இந்தியாவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை அமெரிக்க அரசு திரும்பப்பெற தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் அமெரிக்காவிற்கு 35%, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 29%, இங்கிலாந்துக்கு 9%, ஐக்கிய அரபு நாடுகளுக்கு 8%, ஆசிய நாடுகளுக்கு 3%, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 3%, சவுதி அரேபியாவுக்கு 3%, மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2 %, தென் அமெரிக்க நாடுகளுக்கு 2%, ஆஸ்திரேலியாவிற்கு 2%, கனடாவிற்கு 2 % ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வு காரணமாக அமெரிக்காவின் ஏற்றுமதி 10-15% குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பா யூனியனுடன் நடைபெற்ற வரும் சுமுக பேச்சுவார்த்தை உள்ளிட்ட காரணத்தினால் அந்த நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.