Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திசை திருப்பும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் ஈடுபட வேண்டாம்: முதல்வர் அறிவுரை

சட்டப் பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பான விவாதத்தில் திருநெல்வேலி தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் (பாஜக) பேசியதாவது: எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் போய்தான் வாங்கிவர வேண்டியிருக்கிறது. அதேசமயம் ஆளுங்கட்சி தரப்பில் நீதிமன்றத்திற்கு போய் எந்தக் கூட்டமும் இதுவரையிலும் நடைபெறவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அனுமதி இல்லாத இடங்கள் என்று வரும்போது தான் பிரச்சினை வருகிறது. அதனால் தான் நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு அணுக வேண்டிய சூழல் ஏற்படுகிறதே தவிர வேறு அல்ல. ஏதாவது அனுமதிக்கப்பட்ட இடத்திலே அப்படி ஏதாவது உங்களுக்கு அனுமதி தரவில்லையென்று சொன்னால் அதை ஆதாரத்தோடு நீங்கள் சொல்வீர்களேயானால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.

நயினார் நாகேந்திரன்: விஜய் வந்து நின்ற உடனேயே ஜெனரேட்டரில் உள்ள கரண்ட் ஆப் ஆகிறது. செருப்பு வீசப்படுகிறது, லத்தி சார்ஜ் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: லத்தி சார்ஜ் பற்றி சொல்கிறார். அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

நயினார் நாகேந்திரன்: செருப்பை வீசியது யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக திட்டமிட்டு யாரும் செய்ததில்லை. அங்கு தண்ணீர் வேண்டும் என்ற பிரச்சினையை அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்குத் தான் வீசப்பட்டதாக நான் கருதுகிறேன். நீங்கள் இதை திசை திருப்புவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இதை தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். உடனடியாக பாஜ உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.